தாலி ஒரு வேலி

 

பொன்னி மகள் சின்னத்தங்கம்

அழகினிலே மெருகூட்டிய தங்கம்

நளினச் சிரிப்புக்காரி

நறுக்கென்ற பேச்சுக்காரி.

 

ஆடவர் கண்வீச்சுக்கு

அலட்சியப் பார்வைக்காரி

காளையரைக் கவரும் கட்டுடலும்

திரண்ட புடைத்த பின்னழகும்

 

பவளம்போல்; பல்வரிசையும்

கொவ்வைச் சொண்டுகளும்

கிள்ளத் தோன்றும் கன்னங்களும்.

கயல் மீன் கண்களும்

 

தலைமேல் மீன் கூடையோடு

தாளம் தவறாத நடை போட்டு

கைவீச்சும் அதற்கேற்ப அசைபோட

ஒடிந்துவிடும் இடை தெரிய

 

சுன்னாகச் சந்தை நாடி

பலர் பார்த்து பல்லிக்க

சிலர் கண்டு உடல் சிளிர்க்க

ஒயிலாகப் போய்ச் சேர்வாள்.

 

விதானையார் வினாசித்தம்பியும்

போஸ்ட் மாஸ்டர் பொன்னையரும்

வட்டிக்கடை வடிவேலுவும்

சங்கக்கடைச் சதாசிவமும்

 

மணியகாரர் மாணிக்கமும்

பள்ளிக்கூட வாத்திமாரும்

அவள் அழகை இரசிப்பதற்காக

மீன் வாங்கும்; வாடிக்கையாளர்.

 

என்ன தங்கம் சீலை புதுசே?

உன் நிறத்துக்கேற்ற பிளவுசு

இரசித்த ஒரு இளைஞன் கேள்வி.

 

என்ன ராசாத்தி முகத்தில் வாட்டம்

வேலை என்ன கனத்துப்போச்சோ?

நான் வரட்டே உதவி செய்ய ?

விசனத்துடன் இது வினாசியின் கேள்வி

 

என்ன குஞ்சுவை கனகாலம் காணோம்

காய்ச்சல் ஏதும் வந்ததோ உனக்கு?

மருந்து வாங்கி நான் தரவே.

கவலையுடனும் கந்தையர் கேட்டார்.

 

உன்னைக் காணாமல் ஊரில் பேச்சு

சந்தையின் செழிப்பு அதனால் போச்சு

மணியகாரரின் எண்ணம்,

அவளுக்குத் தெரியாமலா என்ன?

 

உனக்கும் சேர்த்தோ மீனின் விலை

எதுவும் நான் வாங்கத் தயார்

நக்கல் பேர்வழி  நடராசர் பேச்சு.

 

உன்றை நெற்றியில் அதென்ன திலகம்.

தங்கம் கழுத்தில் தங்கமா மினுங்குது?

வாடிக்கையாளரின் வேடிக்கைக் கேள்விகள்

அம்பு போல் அவளை தைத்து நின்றன.

 

என்ன கரிசனம். என்ன அன்பு

பேச்சினில் தான் எத்தனை வம்பு.

சட்டைக்குள் கையை வைத்தாள் அவள்

எல்லோரும் விட்டனர் பெருமூச்சுக்கள்

 

வெளியே வந்ததோ மார்பகத்தே

மறைத்து வைத்திருந்த தாலிக்கொடி

என் புருஷன்  தந்த பாதுகாப்பு இது

அவர் கையால் கட்டிய தாலியிது

 

இப்ப நான் ஒருவனுக்குச் சொந்தம.;

கொஞ்ச நேரத்தில் என் மச்சான் வருவான்

கேள்விகளை அவரிடம் மறக்காமல் கேளுங்கள்

சரியான பதில்களைத் அவர்தக்கபடி தருவார்.

 

கேள்வி கேட்டவர்கள் அனைவரையும்

அடுத்த வினாடி அந்த இடத்தில் காணோம்

வேறு தங்கத்தை தேடிப்போயினரோ?.

மச்சான் வரமுன் விரைந்து ஓடினரோ?

 

என்னடி தங்கம.; உனக்குத் திருமணம்

எப்பவடி நடந்தது. உண்மையைச் சொல்லடி.

கேள்வி கேட்ட செல்வியைப் பார்த்து

கெக்கட்டம் விட்டுச் சிரித்தாள் சின்னத்தங்கம்

 

என்ன அக்கா உனக்குத் தெரியாமலா எனக்குத் திருமணம்?

கிலிட்டுத் தாலியும் ஒரு கொஞ்சம் குங்குமமும்

பலர் பார்வையிலும் கொஞ்சலிலுமிருந்து

என்னைக் காக்கத்தான் இந்த வேஷம்

 

******

அரங்கேற்றம்

 

அடிவான விளிம்பினில்

ஆதவன் விழித்திட

 

இயற்கையெனும் அரங்கினில்

இரவெனும் திரை நீங்கிட

 

ஈரப் பனித்துளிகள்

பசும் புற்களில் மினுங்கிட

 

குதிரைகள் துள்ளித்

திமிதிமி போட

 

கூவும் குயிலின் இசையுடன்

சில்வண்டுகளின் மோர்சங்கும்

 

சிட்டுக் குருவிகளின்

சிறப்பான சித்தாரும்

 

காற்றினில் மூங்கில்கள்

புல்லாங்குழல் இசைத்திட

 

"சோ" வென்ற நீர் வீழ்ச்சியின்

சோடை போகாத பின்னணியும்

 

வானத்து இடிமுழக்கம்

மத்தளம் வழங்கவும்

 

அரவங்களின் ஆட்டத்தின் பின்

மயில்களின் நடனமும்

 

தடாகத்து தவளைகளின்

தாளவாத்தியக் கச்சேரியும்

 

ஆற்றோர நண்டுகளின்

அலங்கார நர்த்தனமும்

 

வண்ணத்துப் பூச்சிகளின்

வர்ணஐல விந்தைகளும்

 

புள்ளிமான் கூட்டத்தின்

புதுமையான துள்ளல்களும்

 

நரிமாமா குழுவினரின்

"நயவஞ்சகம்" நாடகமும்

 

சந்தன மர நறுமணம்

தென்றலில் மிதந்து வர

 

அலைவரிசையாய் எறும்புகள்

அரங்கேற்றம் இரசிக்க வர

 

ஆமைகள் அசைந்தாடி

மெல்ல மெல்ல ஊர்ந்துவர

 

ஜீவராசிகள் ஆரவாரம்

சபையினை நிறப்பிட

 

ஓரமாய் நின்ற ஓநாய்கள்

"ஓ"வென்று ஓலமிட.

 

வான்கோழிகள் வாய்விட்டு

"குழு குழு" வெனச் சிரித்திட

 

ஆந்தைமார் வியப்பினில்

"திரு திரு" வென விழித்திட

 

யானையார் குடும்பத்துடன்

வெட்டவெளியினில் நின்று இரசித்திட

 

இயற்கையின் அரங்கினிலே

அரங்கேற்றம் இனிதாக நடந்ததுவே

                                                  

 

கனேடியப் பருவமங்கை

 

 

 

 

 

 

 

மார்கழி வெண்பனி      சுற்றுப்புறம்     சூழ்ந்து நிற்க

வெணநிறச் சேலையோடு மங்கையவள் நெடுஞ்சாலை   ஓரந்தனில்

பன்சாதிச்       சாரதிகள்       விழிகளின்      பூரிப்பினில்

மங்கையவள்   தனிமையாய்    நெடுந்தவம்     செய்துநின்றாள்

 

 வைகாசி       வசந்தத்தின்    பூப்பினது       அணைப்பினிலே

அம்மங்கை சேலையின் பசும்பச்சை     நிறந்தன்னை

நெடுஞ்சாலைச் சாரதிகள்        பார்வையினால் ரசித்திடவே

மங்கையவள் தனிமையாய்      நெடுந்தவம்    செய்துநின்றாள்

 

 கோடையின்    கொடையினால் கொண்டையினில் பூச்சூடி

அங்கமெல்லாம் மலர்;சூடிப் பூரித்து அவள் நின்றதனை

பெருஞ்சாலை   இளம் சாரதிகள் கண்குளிர      இரசித்திடவே

மங்கையவள்   தனிமையாய்    நெடுந்தவம்     செய்துநின்றாள்

 

 

ஐப்பசி மாதம்தனில்;            குளிர்தென்றல்  வீசிடவே

பலவர்ணச்     சேலைகளை    மங்கையவள் மாற்றிவிட

பல்சாதி வழிப்போக்கர்   விழிபிதுங்கி    வியந்திட

மங்கையவள்   தனிமையாய்    நெடுந்தவம்     செய்துநின்றாள்

 

 இலையுதிர்     காலம்தனில்    சருகுகள்       புடைசூழ

சேலையின்றி நிர்வாணமாய்த்    துனிந்;தே நின்றுவிட

நெடுஞ்சாலைப்  பயணிகள்      கவனத்தைக்    கவராது

மங்கையவள்   தனிமையாய்   நெடுந்தவம்     செய்துநின்றாள்

 

                                  *********