தொடர்பு இடைவெளி- ( Communication Gap)

 “அம்மாவும் அப்பாவும் என்னை எனது விருப்பத்துக்கு  எதையும் தீர்மானித்து செயல்பட விடுகிறார்கள் இல்லை. நான் அவர்கள் விஷயத்தில் தலையிடுவது கிடையாது. அப்படியிருக்க  ஏன் அவர்கள் என் விஷயங்களில் தலையிடுகிறார்கள்?” நான் அடிக்கடி கேட்ட உரையாடல் இது. அனேக இளைஞர்களிடம் இருந்து வெளிவரும் அங்கலாய்ப்;பு. ஒருவரின் மனதை மற்றவர் புரிந்து செயல்படத் தடையாக இருப்பது தொடர்பு இடைவெளி. இவ்விடைவெளி தோன்ற வயது வித்தியாசம், பயம், பெருமை,  மரியாதை, சமூக அந்தஸ்து, கல்வித் தரம் போன்றவைகள் காரணமாக இருக்கிறது. பெற்றோருக்கும் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுக்கிடையேயான தொடர்பு இடைவெளியினை அநேக புலம் பெயர்ந்த தமிழ் குடும்பங்களில் காணக்கூடியதாயிருக்கிறது. வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களுடன் இணைந்து செயற்பட தொடர்பு இடைவெளி காரணமாக இருப்பின் அது ஊழியரின்  உற்பத்திக்கும்,; முன்னேற்றத்திற்கும் தடையாக இருக்கும். வேலைக்கு விண்ணபித்து, நேர்முகப் பரீட்சைக்குப் போனால், ஒரு திட்டத்தை செயல்படுத்தும் போது மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும் முறைகளை எவ்வாறு கையாளுவீர்கள் என்பதில் முக்கிய கவனம் செலுத்துவார்கள் பரீட்சிப்பவர்கள்.

 

எந்த வேலையைச் செய்யவும் தொடர்பு அவசியம். தொடர்பு கொள்ள தொலைப் பேசி, மின் அஞ்சல், தொலை நகல் போன்ற சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. வெகுதூரத்தில் இருப்பவருடன் முகத்துக்கு முகம் பார்த்து தொடர்புகொள்ள தொலைக்காட்சித் திரை ஒன்றில் பார்த்து மகாநாடு நடத்தும் அளவுக்கு ( Video Conferencing) எனும் தொழில் நுட்ப முறை விருத்தியடைந்துள்ளது. அதோடு கூட தொலைப்பேசியில் பலர் ஒரே சமயம் மகாநாடு நடத்தலாம். ஒருவர் ஒரு மொழியில் பேசினால் மற்றவர்கள் தமக்குத் தெரிந்த மொழியில் கேட்கும் அளவுக்கு மொழிபெயர்ப்பு செய்யும் வசதிகள் உண்டு. இணையத்தளத்தின் மூலமாகவும் பேசி ( Internet Chat) தமது உறவை வளர்த்துக் கொள்கிறார்கள் பலர். முற்காலத்திற்தான் உறவை வலுப்படுத்தப் பல தொழில் நுட்பத் தடைகள் இருந்தன. இப்போது தொடர்பை வளர்க்க இடம், காலம், மொழி போன்ற கட்டுப்பாடில்லை. மனநிலை தான் தடையை ஏற்படுத்துகிறது.

வணிகத்துறையில் தொடர்பு மிகவும் முக்கியம். அதுவும் விற்பனையாளர் அல்லது சந்தைப் படுத்தல் அல்லது திட்ட முகமையாளர் ( Project Manager)  போன்ற பதவிகளுக்கு சரளமாக, கூச்சமின்றி, பேசுபவர்களையே தேர்ந்தெடுக்க விரும்புவார்கள். விற்பனையாளர்களுக்கு நா வன்மை, மொழி வன்மை, பொறுமை , மற்றவர்களின் கருத்துக்களை ஏற்கும் மனப்பான்மை அவசியம். தொடர்பின் போது அவசரப் படாது மற்றவர் சொல்லும் கருத்துக்களை உள்ளடக்கிப் பி;ன் அலசப் பழக வேண்டும். பாவனையாளர்களுக்கும் விற்பனையாளர்களுக்குமிடையேயான உறவு தொடர்பு இடைவெளியைப் பொறுத்தது. இவ் இடைவெளி பெரிதாகில் சேவைத்திறன் குறைகிறது. பாவனையாளர்கள் விலகிச்செல்வார்கள். முடிவு நிறுவனத்துக்கு வருமானம் குறையும். ஒரு திட்டத்தை குறிப்பிட்ட கால எல்லைக்குள் பூர்த்தி செய்வதற்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அவசியம், பொறியியல் துறை,  தொழில் நுட்பத் துறை, சந்தைத்துறை, கண்ணுகப்பகுதி போன்ற ஒவ்வொரு துறை ஊழியர்களை ஒன்றிணைத்து அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலைகள் குறிப்பிட்ட கால எல்லைக்குள் பூர்த்தியாகுமா என்பதை அவதானித்துத் தக்க நடைவடிககை எடுப்பது அவசியம். இதனால் அவர்களோடு அடிக்கடி தொடர்பு கொண்டு உறவைப் பலப்படுத்த வேண்டும். அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை அறிந்து தீர்த்து வைக்க வழிமுறைகளை வகுக்க வேண்டும். தொடர்பு இடைவெளி பெரிதாகில் இப்பிரச்சனைகளை அடையாளம் காணமுடியாது. அதனால் குறிப்பிட்ட கால எல்லைக்குள் திட்டத்தை பூர்த்தி செய்ய முடியாது போகலாம்.

கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் கூட மாணவர்களுக்கும் போதனையாளர்களுக்கும் இடையே தொடர்பு இடைவெளி கூடுமாகின் கல்வியின் பயன் அற்றுப் போகும். முற்காலத்தில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையேளான உறவு வித்தியாசமானது. பல பரிசோதனைகளின் பின்னரே அவ்வுறவில் நம்பிக்கை ஏற்படுகிறது. இத்தகைய இடைவெளியினை ஸ்ரீலங்கா கல்விக் கூடங்களில் அனேகமாகக் காணலாம். ஆசிரியர்களும் மாணவர்களும் நண்பர்களாகப் பழகுவது மிகக் குறைவு. ஆசிரியரைப் பார்த்து பல மாணவர்கள் ஒதுங்கிப் போவதை நாம் கண்டுள்ளோம். ஒன்று பயம், மற்றது மரியாதை காரணமாகும். இது போன்றே பல்கலைக்கழகத்திலும் பேராசிரியருக்கும் விரிவுரையாளர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே தொடர்பு இடைவெளி நிலவுவதை நாம் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. “ஏதாவது எக்கச்சக்கமாகக் கேள்வியை மாணவன் கேட்டு நான் தக்க பதில் சொல்லாமல் போனால் அவனுக்கு என் மேல் உள்ள மதிப்பு குறைந்துவிடும் என்று ஆசிரியரோ அல்லது விரிவுரையாளரோ சிந்திக்கலாம். அதனால் ஏன் இந்தத் தேவையில்லாத உறவு என விலகிப் போகலாம். அதே போன்று ஏதாவது பிழையான, முட்டாள்தனமான கேள்வியை நான் கேட்பதின் மூலம் என்மேல் ஆசிரியருக்கு உள்ள மதிப்பு குறைந்து விடுமோ என்ற பயமும் மாணவனுக்கும் ஆசிரியருக்கும் இடையிலான தொடர்பு இடைவெளியை மேலும் விரிவடையச் செய்யும். இவர்களுக்கிடையே உள்ள இடைவெளி விரிவடைய அந்தஸ்து கல்வித் தராதரமும் ஒரு காரணமாகும். ஒரு ஆசிரியரின் திறமை மாணவர்களி;ன சந்தேகங்களைத் தீர்ப்பதில் தங்கியுள்ளது. சில ஆசிரிர்கள் இன, மத, மொழி வேற்றுமைகாரணமாக ஒரு சில மாணவர்களுடன் தொடர்பு கொள்வதில்லை. அதுவுமன்றி தமக்குப் பிடித்த தம் சாதியையச் சேர்ந்த மாணவர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பார்கள். பரீட்சையில் சில சலுகைகளையும் செய்வார்கள். இது ஒரு குரு பேணவேண்டிய  ஒழுக்கத்துக்கு முரண்பாடானது.

பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளைப் போன்று வைத்தியர்களுக்கும்; நோயாளிகளுக்குமிடையே தொடர்பு இடைவெளி சிறீலங்காவில் பெரும்பாலும் நிலவுவதைக் காணலாம். ஏதோ தாம் அந்தஸ்தில் கூடியவர்கள் தேவையில்லாமல் நோயாளியுடன் பேசி சந்தேகங்களைத் தீர்க்க தமது நேரத்தை வீணாக்க விரும்பாதவர்கள் என்ற பாவனையில் அனேக வைத்தியர்கள் அங்கு நடப்பதையிட்டு பலர் குறைபட்டுள்ளனர். இது பெரும்பாலும் சமூக அந்தஸ்;துடன் இணைந்த பிரச்சனையாகும். ஒரு நோயாளி சுகமடைய அவனின் மனநிலை முக்கியமானது. தன் நோயைப்பற்றி பயந்து, தேவையில்லாத கற்பனைகளையும் மற்றவர்களி;ன விமர்சனங்களையும் உள்வாங்கி வருத்தத்தைப் பெருப்பித்துக்கொள்வார்கள். இந்நிலை மாற நோயாளி-வைத்த்pயர் தொடர்பு இடைவெளி குறையவேண்டும். தமது சந்தேகங்களை அவருடன் பேசித் தீர்ப்பது அவசியம். அதனால் எத்தகைய உணவை உட்கொள்ளவேண்டும், தேக அப்பியாசம் செய்யவேண்டும் போன்ற விடயங்களைப் பற்றி அறிந்து செயல்படலாம். இது போன்றே வைத்தியருக்குக் கைராசி மாத்திரமின்றி, முகராசியும். தொடர்பு ராசியும் அவசியம்.  “அந்த வைத்தியர் தற்பெருமை இல்லாதவர். ஆவருடன் கதைத்தால் இருக்கிற வருத்தமும் போய்விடும். நோயைப் பற்றி விளக்கமாய் சொல்வார்” என்று சில வைத்தியர்களை போற்றிப் புகழும் நோயாளிகளைக் கண்டுள்ளோம். இதுவும் ஒரு வகை மருத்துவ முறையாகும். உயிருக்கு ஆபத்து என்று தெரிந்திருந்தாலும் அதை நகைச்சுவை கலந்து நாசூக்காய் சொல்லும் வைத்தியர்களும் உண்டு.

வயது வந்தவர்களுக்கும் இளைஞர்களுக்குமிடையே “தொடர்பு இடைவெளி” நமது புலம் பெயர்ந்து வாழும் தமிழ் சமுதாயத்தினரிடையே விரிந்து வருவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணங்களில் மேற்கத்திய கலாச்சாரமும் ஒன்றாகும். மற்றது தமக்கு எல்லாம் தெரியும் என்ற போக்கு. வயது வித்தியாசமும், மனப்பக்குவமடையாத நிலையும் ஒன்று. பதினாறு வயதிலேயை பெற்றோரைப் பிரிந்து வாழும் கலாச்சாரத்தில் மேற்கத்திய நாட்டு குழந்தைகள் வளர்கிறார்கள். “பிஞ்சில் முற்றியது” என்று பலரால் விமர்சிக்கப்படுகிறார்கள். ஒழுக்கம் தவறிய யுவதிகள் இளைஞர்களால் ஏமாற்றப்படுகிறார்கள். கைக்குழந்தையுடன் தனித்து விடப்படுகிறார்கள்.  திசை தெரியாது போகும் இவர்கள், ஒழுக்கம் தவறி நடக்கும் முறைகள். போதை மருந்து, சிகரெட், மது, மாது, கேளிக்கை விளையாட்டுகள், வன்முறை ஆகியவற்றிற்கு அடிமை ஆகிறார்கள். பெற்றோர்களிடம் இருந்து பிரிந்துஇ தொடர்பை இழந்து தூரச்செல்கிறார்கள். அனுபவம், சிந்திக்கும் திறமை, தாம் வந்த அடிச்சுவடுகள்  இதெல்லாம் உதறித்தள்ளப்படுகிறது. கால் கடுக்க பள்ளிக்கூட வாசலில் வெய்யிலில் நின்று, பள்ளிக்கூடம் விட்டதும் தமது மகனுக்கு வெய்யில் படாமல் குடை பிடித்து வீட்டுக்கு அழைத்துச் சென்று நேரத்துக்கு உணவு ஊட்டிய பெற்றோர்களின் கதைகளை நாம் அறிந்துள்ளோம். அவனின் வளர்ச்சிக்காக. படிப்பிற்காக, ஒடி ஓடி உழைத்து ஊருக்குலைந்து போனவர்களுமுண்டு. வளர்ந்து பட்டம் பெற்று வெளிநாடு சென்று தமது போக்குகளை மாற்றிக் கொண்டு “பெற்றோர்கள் பழமையில் ஊறியவர்கள், மேல் நாட்டுக்கலாச்சாரத்துடன் பொருந்தாதவர்கள் என்ற மனப்பான்மையில் அவர்களுடன் தொடர்பு இடைவெளியை விரிவுபடுத்தியவர்கள் பலர். “இவரோடை பேச எனக்கு என்ன வேண்டியிருக்கு” ஏதும் குறை சொல்லுவார் அல்லது தடை சொல்லுவார். பிரயோசனமாக ஏதும் சொல்லமாட்டார் என்ற கருத்தில் அவர்களிடம் ஆலோசனை கேட்பதை தவிர்த்து விடுவார்கள்.  “எல்லாம் எனக்குத் தெரியும்” என்ற மனப்பான்மை. இது போன்றே தமது சுய கௌரவத்தை விட்டுக்கொடுத்து பிள்ளைகளிடம் இணையத்தளத்தைப் பற்றிய விடயங்களைக் கற்றறிய தயங்குவார்கள். “நான் பாடம் சொல்லிக் கொடுத்தவனிடம் நான் பாடம் கேட்பதோ?” போன்ற மனப்பான்மை. இந்த தொடர்பு இடைவெளி திருமணத்தில் பல பிரச்சனைகளை உருவாக்கியுள்ளது. தந்தை இறந்தபின்னரும் பிரேதத்தில் முழிக்காத பிள்ளைகளும் உண்டு. தமக்கும் அதே நிலை ஒரு நாள் ஏற்டலாம் என்று அவர்கள் சிந்தித்துப் பார்ப்பது கிடையாது. திருமணத்தின் பின் பெற்றோhர் தொடர்பின் இடைவெளி மேலும் விரிவடைய  மனைவி அல்லது கணவன் காரணமாகலாம். அத்திருமணம் காதல் திருமணமாக இருப்பின் பெற்றோரும் தொடர்பைப் பலப்படுத்த தயங்குவார்கள். ஒரு பேரனோ பேத்தியோ பிறந்தவுடன் பிளவுபட்டிருந்த உறவுஇ பாசம் காரணமாக ஒன்றிணையச் சாத்தியமாகிறது. சில நேரங்களில் குடும்பத்தில் நடந்த சம்பவம், அல்லது நோய் உறவின் விரிவைப் போக்கிறது.

பாசத்துடன் தோளில் சுமந்து உணவூட்டி, குழந்தையைப்போல் சேர்ந்து விளையாடிய பேரப்பிள்ளைகள் கூட தமது பேரன்மார்ளுடன் தொடர்பு இடைவெளியை வரிவுபடுத்துவதைக் காண்கிறோம். புறக்கணிக்கப்பட்ட நிலையில் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளி;ன் கட்டுப்பாட்டுக்குள் வாழும் வயதுவந்தோர் மனநிலை பாதிக்கப்படுகிறது. உள்ளுக்குள் வெம்பி வருந்துகிறார்கள். ஒரு அவசரத்துக்குப் போக்குவரத்துக்கு கூட அவர்களை நம்பி வாழ வேண்டிய நிலை. அக்காலத்தில் அவர்களைத்தாம் அணைத்து, வளர்த்ததை நினைத்து மனம் நோவோர்கள் பலர்.

தொடர்பு இடைவெளி மனஸ்தாபத்தை வளரவிடுகிறது. தேவையில்லாத பிரச்சனைகளை பேசித் தீர்க்காமல் விடுவது மனஸ்தாபத்தை வரிவடையச் செய்கிறது. சுயகௌரவம் இதற்குத் தடையாகிறது. அதுவுமன்றி யார் முதலில் பேசுவது?. நான் பேசினால் அவர் பேசுவாரா? எப்படி ஆரம்பிப்பது, போன்ற கற்பனையில் பல வித சிந்தனைகள் தடையாகின்றன. இந்த நிலையில் ஒரு மத்தியஸ்தரின் உதவித் தேவைப்படலாம். அல்லது இருவருக்கும் விரும்பிய பொதுவான விடயம் பேச்சை ஆரம்பிக்க உதவலாம். மேற்கத்திய நாடுகளில் பருவநிலை பெரும்பாலும் பேச்சை ஆரம்பித்து தொடர்பு இடைவெளியினை குறைக்க உதவுகிறது. அரசியலைப் பற்றி பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. இருவருக்கும் பிடித்த உணவு வகையும் பேச்சை ஆரம்பிக்க உதவும் நல்ல ஒரு விடயமாகும்.

எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்குமிடையே தொடர்பு மிகக் குறைவு. நான் எழுதியதை வாசகர்கள் வாசித்தாக வேண்டும் என நினைப்பவர்களுண்டு. வாசகர் விமர்சனத்துக்கு அவ்வளவுக்கு மதிப்பளிக்காதவர்கள் வாசகர்களிடமிருந்து தூர விலகி நிற்கிறார்கள். இது எழுத்துத் துறைக்கு அவ்வளவு நல்லதொன்றல்ல. வாசகருடன் தொடர்பு கொண்டு இடைவெளியினைக் குறைக்கப் பல வழிகளைக் கையாளலாம். வாசகர் வட்டத்தை உருவாக்கி உறவைப் பலப்படுத்தலாம். இணையத்தளம் மூலம் பலப்படுத்தலாம். இதனால் எழுத்தாளர்களுக்கு புது ஆக்கங்கள் உருவாக வழி ஏற்படுகிறது.

அரசியல்வாதிகள் தேர்தல் காலங்களில்; மட்டுமே மக்களிடையே தொடர்பை வலுப்படுத்துகிறார்கள். பின்னர் அடுத்த தேர்தல் வரும் வரை அவ்வுறவு பலவீனப்பட்டு விடுகிறது. இது ஒரு வகை சுயநலப்போக்கு என்று சொல்வதில் பிழையில்லை. சில சமயம் இந்தப்போக்கு அவர்களுக்குப் பாதகமாக அமைந்துவிடுகிறது.

பிரச்சனைகள் தீர தொடர்பு தொடரவேண்டும். வணிகச் சந்தையின் பங்கு விரிவடையத் தொடர்பு இடைவெளி குறைய வேண்டும். சேவைத் தரம் வளரத் தொடர்பு அவசியம். பாசம் வளர, குடும்ப ஒற்றுமை ஓங்கத் தொடர்பு இறுக்கமாக வேண்டும்.

 

                                                            ******